கிறிஸ்துவிற்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்

3இறைவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமாயிருக்கிறவருக்கு துதி உண்டாவதாக. அவர் பரலோகத்தின் உயர்வான இடங்களில் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் நம்மை கிறிஸ்துவில் ஆசீர்வதித்திருக்கிறார். 4நாம் இறைவனுடைய பார்வையிலே, பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் இருக்கும்படி, உலகம் படைக்கப்படுவதற்கு முன்னதாகவே, அவர் நம்மை கிறிஸ்துவில் தெரிந்துகொண்டார். இறைவன் தம்முடைய அன்பின் நிமித்தமாக, 5இயேசுகிறிஸ்துவின் மூலமாய் சொந்த பிள்ளைகளாக்கிக்கொள்ள நம்மை முன்குறித்தார். இதை அவர் தமது சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் செய்தார். 6தாம் அன்பு செலுத்திய கிறிஸ்துவில், நமக்கு இலவசமாய் வழங்கப்பட்டுள்ள இந்த மகிமையான கிருபையின் நிமித்தம் இறைவனைப் புகழ்வோமாக. 7கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக நமக்கு மீட்பு உண்டு. அது இறைவனுடைய கிருபையின் நிறைவிலிருந்து கிடைக்கும் பாவங்களுக்கான மன்னிப்பு. 8அந்தக் கிருபையை, இறைவன் நமக்கு எல்லா ஞானத்துடனும், விளங்கும் ஆற்றலுடனும் சேர்த்து, நிறைவாய் கொடுத்திருக்கிறார். 9இறைவன் தமது திட்டத்தின் இரகசியத்தை நமக்குத் தெரியப்படுத்தினார். அது அவருடைய விருப்பத்தின்படி, தாம் கிறிஸ்துவில் செய்யவிருந்த நோக்கமாயிருந்தது. 10பரலோகத்திலும் பூமியிலுமுள்ள எல்லாவற்றையும், கிறிஸ்துவின் தலைமையின்கீழ் ஒன்றுசேர்ப்பதே அந்த இரகசியம். காலங்கள் அவற்றின் நிறைவை அடையும்போது, இறைவன் அதை நிறைவேற்றுவார்.

11தம்முடைய திட்டத்தின் நோக்கத்திற்கேற்ப எல்லாவற்றையும் நிறைவேற்றுகிற, இறைவனுடைய தீர்மானத்தின்படியே நாமும் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவில் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். 12இதனால் கிறிஸ்துவில் முதலாவதாக நம்பிக்கை கொண்டிருக்கிற நாம், அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாய் இருக்கும்படி, இறைவன் விரும்பினார். 13அப்படியே நீங்களும் சத்திய வார்த்தையை, அதாவது உங்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கிற நற்செய்தியைக் கேட்டபோது, கிறிஸ்துவுக்கு உட்பட்டவர்களானீர்கள். அதை நீங்கள் விசுவாசித்தபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே, அவரில் முத்திரை பொறிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு இருக்கிறீர்கள். 14இறைவனுக்கு உரிமையானவர்களான நாம் மீட்கப்படும் வரைக்கும், நமக்குரிய உரிமைச்சொத்தை அடைவோம் என்பதற்கு இந்தப் பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் இருக்கிறார். அவருடைய மகிமையின் நிமித்தம் அவரைப் புகழ்வோமாக.