யூதரும் யூதரல்லாதவரும் கிறிஸ்துவினால் இணைக்கப்படுதல்
11ஆகையால், “விருத்தசேதனம் செய்துகொண்டிருக்கிறோம்” என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், பிறப்பினால் யூதரல்லாதவர்களாய் இருந்த உங்களை, “விருத்தசேதனம் பெறாதவர்கள்” என்று உங்களை அழைத்தார்கள் என்பதை நீங்கள் நினைவில்கொள்ளுங்கள். இந்த விருத்தசேதனம், மனிதரின் கைகளால் உடலில் செய்யப்பட்டது. 12அக்காலத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவிலிருந்து புறம்பானவர்களாய், இறைவனின் சுதந்தரமாகிய இஸ்ரயேலுக்கு உட்படாதவர்களாகவும், வாக்குக்கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை அறியாதவர்களாகவும் இருந்தீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாதவர்களாகவும், இறைவன் இல்லாதவர்களாகவுமே இந்த உலகத்தில் வாழ்ந்தீர்கள். 13ஆனால் முன்பு ஒருகாலத்தில் தூரமாய் இருந்த நீங்கள், இப்பொழுதோ கிறிஸ்து இயேசுவில், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே இறைவனுக்கு சமீபமாயிருக்கிறீர்கள்.
14கிறிஸ்துவே நமது சமாதானத்தின் வழியானார். அவரே இருபிரிவினரையும் ஒன்றாக்கி, தடையாயிருந்த பகைமைச் சுவரை தமது உடலின் மூலமாக அழித்தார். 15கிறிஸ்து தமது உடலினால் மோசேயின் சட்டத்தை, அதின் கட்டளைகளோடும் விதிமுறைகளோடும் நீக்கியதினால், இந்த இருபிரிவினரையும் தம்மில் ஒரு புதிய மனிதனாக உருவாக்கி, சமாதானத்தை ஏற்படுத்தினார். 16சிலுவையினால் இருபிரிவினரையும் ஒரே உடலாக இறைவனுடன் ஒப்புரவாக்குவதே அவருடைய நோக்கமாயிருந்தது. கிறிஸ்து தமது சிலுவையினால் அவர்களது பகைமையைச் சாகடித்தார். 17இவ்விதமாய் அவர் தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாய் இருந்த அவர்களுக்கும் நற்செய்தியின் சமாதானத்தைப் பிரசங்கித்தார். 18ஆகவே கிறிஸ்து மூலமாக நாங்கள் இரு பிரிவினரும் ஒரே ஆவியானவரினால் பிதாவின் முன்னிலையில் வரக்கூடியவர்களாய் இருக்கிறோம்.
19ஆகையால் யூதரல்லாதவர்களாகிய நீங்கள் இனிமேலும் அந்நியரும் அறியாதவரும் அல்ல, இப்பொழுது நீங்களும் இறைவனுடைய மக்களுடன் குடியுரிமை பெற்றவர்களாயும், இறைவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாயும் இருக்கிறீர்கள். 20நீங்களும் அப்போஸ்தலர், இறைவாக்கினர் ஆகியோரை அஸ்திபாரமாயும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாயும் கொண்டு கட்டப்பட்டிருக்கிறீர்கள். 21கிறிஸ்துவிலேயே அந்த முழுக்கட்டிடமும் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கர்த்தரில் ஒரு பரிசுத்த ஆலயமாக இருக்கும்படி வளர்ச்சி பெறுகிறது. 22நீங்களும்கூட கிறிஸ்துவில், இறைவன் தமது ஆவியானவரினால் குடியிருக்கும் இடமாக சேர்த்துக் கட்டப்படுகிறீர்கள்.


