இஸ்ரயேலின் அழிவு

8யெகோவா யாக்கோபுக்கு விரோதமாக ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார்;

அது இஸ்ரயேல்மேல் வரும்.

9எப்பிராயீமியரும், சமாரியாவில் குடியிருப்பவர்களுமான

எல்லா மக்களும்,

அதை அறிவார்கள்.

அவர்கள் இருதய இறுமாப்புடனும் பெருமையுடனும்,

10“செங்கற்கட்டிடங்கள் இடிந்து விழுந்தன,

ஆனாலும் திரும்பவும் நாம் நமது கட்டிடங்களை செதுக்கிய கற்களால் கட்டுவோம்.

அத்திமரங்கள் வீழ்த்தப்பட்டன,

ஆனால் நாங்கள் அவைகளுக்குப் பதிலாக, கேதுரு மரங்களை நடுவோம்”

என்று சொல்கிறார்கள்.

11ஆனால் யெகோவா ரேத்சீனின் பகைவர்களை அவர்களுக்கு விரோதமாகப் பலப்படுத்தி,

அவர்களுடைய எதிரிகளைத் தூண்டிவிடுவார்.

12கிழக்கிலிருந்து சீரியரும் மேற்கிலிருந்து பெலிஸ்தியரும்,

இஸ்ரயேலரை திறந்த வாயால் விழுங்கியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் நடந்தும், அவரது கோபம் தீராமல்,

அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.

13எனினும் அந்த மக்கள் தங்களைத் தண்டித்த

இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பவில்லை.

எல்லாம் வல்ல யெகோவாவைத் தேடவுமில்லை.

14ஆகையால் யெகோவா இஸ்ரயேலின் தலையையும், வாலையும்

ஓலையையும், நாணலையும் ஒரே நாளில் வெட்டிப்போடுவார்.

15முதியோரும் பிரபலமானோருமே தலை,

பொய்யைப் போதிக்கும் இறைவாக்கினரே வால்.

16இந்த மக்களை வழிநடத்துகிறவர்கள் அவர்களை நெறிதவறச் செய்தார்கள்;

வழிநடத்தப்பட்டவர்கள் அழிந்துபோனார்கள்.

17ஆகையால் யெகோவா வாலிபர்களில் மகிழ்வதில்லை,

அநாதைகள் மேலும், விதவைகள்மேலும் இரக்கம்கொள்ளவும் இல்லை.

ஏனெனில் அவர்கள் எல்லோரும் இறைப்பற்று இல்லாதவர்களும்

பொல்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.

எல்லோருடைய வாயும் மதிகேட்டைப் பேசுகின்றது.

இவையெல்லாம் நடந்தும், அவரது கோபம் தீராமல்,

அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.

18மெய்யாகவே, கொடுமை நெருப்பைப்போல் எரிகிறது;

அது முட்செடியையும், நெருஞ்சில் செடியையும் தீய்த்து விடுகிறது.

அது அடர்த்தியான புதர்களையும் கொழுத்தி விடுகிறது,

அதன் புகை சுருள் சுருளாக மேலே எழும்புகிறது.

19எல்லாம் வல்ல யெகோவாவின் கோபத்தினால்

நாடு நெருப்புக்கு இறையாகும்;

மக்களும் நெருப்புக்கான எரிபொருளாவார்கள்,

ஒருவனுமே தன் சகோதரனைத் தப்பவிடமாட்டான்.

20அவர்கள் வலப்புறத்தில் பறித்துத் தின்றும்,

பசியோடு இருப்பார்கள்.

இடது புறத்தில் சாப்பிட்டும்,

திருப்தி அடையாதிருப்பார்கள்.

ஒவ்வொருவனும் தன் சொந்த கரத்தின் மாமிசத்தையுங்கூடத் தின்பான்:

21மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் தின்பார்கள்;

இருவரும் ஒன்றுசேர்ந்து யூதாவை எதிர்ப்பார்கள்.

இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல்,

அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.

1அநீதியான சட்டங்களை இயற்றி,

ஒடுக்குகிற கட்டளைகளைப் பிறப்பிக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!

2அவர்கள் ஏழைகளின் உரிமைகளைப் பறிப்பதற்கும்,

என் மக்களில் ஒடுக்கப்பட்டோருக்கு நீதி வழங்காதிருப்பதற்கும்,

விதவைகளைத் தங்களுக்கு இரையாக்குவதற்கும்,

அநாதைகளின் சொத்தை அபகரிப்பதற்குமே இந்தக் கட்டளைகளைப் பிறப்பிக்கிறார்கள்.

3உங்களுக்குத் தண்டனை வரும் நாளிலும்,

தூரத்திலிருந்து அழிவு வரும்போதும் என்ன செய்வீர்கள்?

யாரிடம் உதவிக்கு ஓடுவீர்கள்?

உங்கள் செல்வங்களை எங்கு வைப்பீர்கள்?

4கைதிகளுக்கிடையில் பதுங்குவதையும்,

கொலையுண்டவர்களுக்கிடையில் விழுவதையும்விட, உங்களுக்கு வேறு கதி இராது.

இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல்,

அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.