எருசலேமின் பெண்கள்

9சுகபோக வாழ்வை விரும்பும் பெண்களே,

நீங்கள் எழுந்து எனக்குச் செவிகொடுங்கள்.

கவலையற்ற மகள்களே,

நான் சொல்வதைக் கேளுங்கள்.

10கவலையற்ற மகள்களே,

ஒரு வருடமும் சில நாட்களும் ஆனபின்பு நீங்கள் நடுங்குவீர்கள்.

திராட்சை அறுவடை பலனற்றுப் போகும்;

கனிகொடுக்கும் அறுப்புக் காலமும் வருவதில்லை.

11பகட்டாக வாழும் பெண்களே, பயந்து நடுங்குங்கள்;

கவலையற்ற மகள்களே, கலங்குங்கள்;

உங்கள் உடைகளைக் களைந்து,

உங்கள் இடைகளில் துக்கவுடைகளை உடுத்திக்கொள்ளுங்கள்.

12உங்கள் செழிப்பான வயல்களுக்காகவும்,

கனி நிறைந்த திராட்சைக் கொடிகளுக்காகவும் உங்கள் மார்பில் அடித்துக் கொள்ளுங்கள்.

13முட்செடிகளும் முட்புதர்களும் வளர்ந்து நிறைந்த

எனது மக்களின் நாட்டிற்காகவும்,

மகிழ்ந்து களிகூர்ந்த வீடுகளுக்காகவும்,

கொண்டாட்டமுடைய நகரத்திற்காகவும் புலம்புங்கள்.

14கோட்டை கைவிடப்படும்,

இரைச்சல்மிக்க நகரம் வெறுமையாய் விடப்படும்.

அரண்செய்யப்பட்ட நகரமும் காவற்கோபுரமும் என்றென்றும் குகைகளாகும்;

அங்கே காட்டுக் கழுதைகள் மகிழ்ச்சியடையும், மந்தைகள் மேயும்.

15உன்னதத்திலிருந்து நம்மேல் இறைவனுடைய ஆவியானவர் ஊற்றப்படும்வரையும்,

பாலைவனம் செழிப்பான வயலாகும்வரையும்,

செழிப்பான வயல்கள் வனம்போல் காணப்படும்வரையும் இப்படியே இருக்கும்.

16அப்பொழுது நீதி பாலைவனத்தில் குடியிருக்கும்;

நியாயம் செழிப்பான வளமான வயல்களில் வாழும்.

17நீதியினால் வரும் பலன் சமாதானமாயிருக்கும்;

நீதியின் விளைவு என்றென்றைக்கும் அமைதியும் மன நம்பிக்கையுமாயிருக்கும்.

18என் மக்கள் சமாதானம் நிறைந்த குடியிருப்புகளிலும்,

பாதுகாப்பான வீடுகளிலும்,

தொல்லையில்லாத இளைப்பாறுதலின் இடங்களில் வாழ்வார்கள்.

19கல்மழை வனத்தைக் கீழே வீழ்த்தினாலும்,

பட்டணம் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டாலும்,

20நீர்வளமுள்ள இடங்களில் விதை விதைத்து,

சுதந்திரமாய் உங்கள் மந்தைகளையும் கழுதைகளையும் மேய்வதற்கு விடுகிற

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.