பிடிவாதமுள்ள இஸ்ரயேல்

1“யாக்கோபின் குடும்பத்தாரே, இதைக் கேளுங்கள்.

இஸ்ரயேலின் பெயரால் அழைக்கப்படுகிறவர்களே,

யூதாவின் வம்சத்திலிருந்து வந்தவர்களே,

யெகோவாவின் பெயரினால் ஆணையிடுகிறவர்களே, கேளுங்கள்;

நீங்கள் இஸ்ரயேலின் இறைவனை வழிபடுகிறவர்கள்;

ஆயினும், நீங்கள் உண்மையுடனும், நீதியுடனும் அப்படிச் செய்யவில்லை.

2நீங்கள் உங்களைப் பரிசுத்த நகரத்தின் குடிமக்களென்று சொல்லி,

இஸ்ரயேலின் இறைவனைச் சார்ந்திருக்கிறீர்கள்;

சேனைகளின் யெகோவா என்பது அவரது பெயர்.

3முற்காலத்துக் காரியங்களை முன்கூட்டியே நான் உங்களுக்கு முன்னறிவித்தேன்;

எனது வாய் அவைகளை அறிவித்தது, நானே அவைகளைத் தெரியப்படுத்தினேன்.

பின்பு திடீரென நான் செயலாற்ற அவை நிறைவேறிற்று.

4நீ எவ்வளவு பிடிவாதமுள்ளவனாயிருந்தாய் என்றும்,

உன் கழுத்தின் தசைநார் இரும்பு என்றும்,

உன் நெற்றி வெண்கலமென்றும் நான் அறிந்திருந்தேன்.

5ஆகையால் அவைகளை வெகுகாலத்திற்கு முன்னமே உனக்கு அறிவித்தேன்;

அவை நடைபெறும் முன்பே அவைகளை உனக்குக் கூறினேன்.

ஆதலால், ‘எனது விக்கிரகங்களே இவற்றைச் செய்தன;

எனது மரச்சிலையும், உலோகச் சிலையுமே இவற்றைத் திட்டமிட்டன’

என்று நீ சொல்லமுடியாது.

6இவற்றை நீ கேட்டிருக்கிறாய்; இவை எல்லாவற்றையும் கவனி.

இவற்றை நீ அறிவிக்கமாட்டாயோ?

“இதுமுதல் புதிய காரியங்களை நான் உனக்குச் சொல்வேன்,

இவைகளோ நீ அறியாத மறைவான காரியங்கள்.

7அவை வெகுகாலத்திற்கு முன்பு அல்ல, இப்பொழுதுதான் உருவாக்கப்படுகின்றன;

நீ இதற்குமுன் அவைகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை.

ஆகவே, ‘ஆம், நான் அவைகளை அறிந்திருந்தேன்’

என்று உன்னால் சொல்லமுடியாது.

8நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை;

முந்திய காலத்திலிருந்தே உன் செவிகள் திறக்கப்பட்டிருக்கவில்லை.

நீ எவ்வளவு துரோகி,

பிறப்பிலிருந்தே நீ கலகக்காரன்; இதை நான் நன்கு அறிவேன்.

9நான் என் பெயரின் நிமித்தமாகவே எனது கடுங்கோபத்தைத் தாமதமாக்குகிறேன்;

எனது புகழ்ச்சியின் நிமித்தமாகவே உன்னில் பொறுமையாயிருக்கிறேன்;

நீ அழிந்துபோகாதபடிக்கு எனது கோபத்தை உன்மேல் வரவிடாதிருக்கிறேன்.

10இதோ, நான் உன்னைப் புடமிட்டுச் சுத்திகரித்தேன், ஆயினும் வெள்ளியைப்போலல்ல;

உபத்திரவத்தின் சூளையிலே உன்னைச் சோதித்துப்பார்த்தேன்.

11என் நிமித்தமாக, என் நிமித்தமாகவே இதை நான் செய்கிறேன்.

என் பெயர் களங்கப்பட நான் எப்படி இடமளிப்பேன்?

என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்.