அறிமுகம்

1ஊத்ஸ் என்னும் நாட்டில் யோபு என்றொரு மனிதன் வாழ்ந்தான். அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனுமாய் இருந்தான். அவன் இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகி நடந்தான். 2அவனுக்கு ஏழு மகன்களும், மூன்று மகள்களும் இருந்தார்கள். 3அவனுக்கு ஏழாயிரம் செம்மறியாடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஜோடி ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளும் இருந்தன, அநேகம் வேலைக்காரர்களும் இருந்தார்கள். கிழக்குப் பகுதியில் இருந்த மக்கள் எல்லோரிலும் யோபு மிக முக்கியமான மனிதனாய் இருந்தான்.

4அவனுடைய மகன்கள் ஒவ்வொருவரும், தன்தன் வீட்டில் முறையே விருந்து கொடுப்பது வழக்கம். அத்துடன் தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களுடன் விருந்துக்கு அழைப்பார்கள். 5ஒவ்வொரு முறையும் விருந்து முடிந்தவுடன் யோபு, “என் பிள்ளைகள் ஒருவேளை தங்கள் இருதயங்களில் பாவம் செய்து, இறைவனைத் தூஷித்திருக்கலாம்” என நினைத்து அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவான். அதிகாலையில் ஒவ்வொருவருக்காகவும் தகனபலிகளையும் செலுத்துவான். இவ்வாறு செய்வது யோபுவின் வழக்கமான நடைமுறையாய் இருந்தது.

6ஒரு நாள் இறைவனின் தூதர்கள் யெகோவாவின் சமுகத்தில் கூடிவந்தார்கள், சாத்தானும் அவர்களுடன் வந்து நின்றான். 7யெகோவா சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டார்.

சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்து, அங்குமிங்கும் போய் வருகிறேன்” என்றான்.

8அப்பொழுது யெகோவா சாத்தானிடம், “நீ எனது அடியவன் யோபுவைக் கவனித்தாயா? அவனைப்போல் பூமியில் ஒருவனும் இல்லை. அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனும், இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகி நடக்கிறவனுமாய் இருக்கிறான்” என்றார்.

9சாத்தான் யெகோவாவுக்குப் பதிலாக, “யோபு வீணாகவா இறைவனுக்குப் பயந்து நடக்கிறான்? 10நீர் அவனையும் அவன் வீட்டையும், அவனுக்கு உள்ள எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? நீர் அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்திருக்கிறீர்; அதினால் அவனுடைய ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் நாட்டில் பெருகியிருக்கின்றன. 11ஆனாலும் இப்பொழுது நீர் உமது கரத்தை நீட்டி அவன் வைத்திருக்கும் எல்லாவற்றையும் அடியும். அப்பொழுது நிச்சயமாக அவன் உமது முகத்துக்கு நேராகவே உம்மைச் சபிப்பான்” என்றான்.

12அதற்கு யெகோவா சாத்தானிடம், “சரி, இதோ, அவனிடத்தில் இருப்பதெல்லாம் உன் கையிலிருக்கின்றன; ஆனால் அவனை மட்டும் தொடாதே” என்றார்.

உடனே சாத்தான் யெகோவாவின் சமுகத்தினின்று வெளியேறினான்.

13ஒரு நாள் யோபுவின் மகன்களும், மகள்களும், தங்கள் மூத்த சகோதரனுடைய வீட்டில் விருந்துண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தார்கள். 14ஒரு தூதுவன் யோபுவிடம் வந்து, “உமது எருதுகள் உழுது கொண்டிருந்தன; அருகில் கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன. 15அவ்வேளையில் சபேயர் வந்து தாக்கி அவற்றைக் கொண்டுபோய்விட்டார்கள்; அத்துடன் உமது பணியாட்களையும் வாளால் வெட்டிப் போட்டார்கள். நான் ஒருவன் மட்டுமே தப்பி இதைச் சொல்லவந்தேன்” என்றான்.

16அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் இன்னொரு தூதுவன் வந்து, “ஆகாயத்தில் இருந்து இறைவனின் அக்கினி விழுந்து உமது செம்மறியாடுகளையும் பணியாட்களையும் எரித்துப்போட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி இதைச் சொல்லவந்தேன்” என்றான்.

17அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வேறொரு தூதுவன் வந்து, “கல்தேயர் மூன்று கூட்டமாக வந்து, உமது ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். வேலையாட்களையும் வாள் முனையில் வீழ்த்தினர், நான் ஒருவன் மட்டுமே தப்பி இதை உம்மிடம் சொல்லவந்தேன்” என்றான்.

18அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் இன்னுமொரு தூதுவன் வந்து, “உமது மகள்களும், மகன்களும் அவர்களுடைய மூத்த சகோதரன் வீட்டில் விருந்துண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தார்கள். 19அப்பொழுது திடீரென வனாந்திரத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி, வீட்டின் நான்கு மூலைகளையும் மோதியடித்தது. வீடு அவர்கள்மேல் விழுந்ததால் அவர்கள் இறந்துபோனார்கள். நான் மட்டும் தப்பி இதை உமக்குச் சொல்லவந்தேன்” என்றான்.

20அப்பொழுது யோபு எழுந்து, துக்கத்தில் தன் மேலாடையைக் கிழித்து, தலையை மொட்டையடித்து, தரையில் விழுந்து வணங்கி சொன்னதாவது:

21“என் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தேன்;

நிர்வாணியாகவே திரும்புவேன்.

யெகோவா கொடுத்தார், யெகோவா எடுத்துக்கொண்டார்;

யெகோவாவின் பெயர் துதிக்கப்படுவதாக.”

22இவையெல்லாவற்றிலும் யோபு இறைவன் தனக்குத் தீங்கு செய்தார் எனக் குறைகூறி பாவம் செய்யவில்லை.

1இன்னொருநாள் இறைவனின் தூதர்கள் யெகோவாவின் சமுகத்தில் கூடிவந்தார்கள், சாத்தானும் அவர்களுடன் வந்து நின்றான். 2அப்பொழுது யெகோவா சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?”

எனக் கேட்டார். அதற்கு சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்து அங்குமிங்கும் போய் வருகிறேன்” என்றான்.

3பின்பு யெகோவா சாத்தானிடம், “எனது அடியான் யோபுவைக் கவனித்தாயோ? பூமியில் அவனைப்போல் யாருமே இல்லை; அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனும், இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு நடக்கிற மனிதனுமாய் இருக்கிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை அவனுக்கெதிராகத் தூண்டின போதிலும், இன்னும் அவன் தனது உத்தமத்திலே நிலைத்திருக்கிறானே” என்றார்.

4சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “தோலுக்குத் தோல், ஒருவன் தன் உயிருக்காகத் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் மனிதன் கொடுப்பான். 5ஆனாலும் நீர் உமது கரத்தை நீட்டி அவனுடைய சதையையும் எலும்புகளையும் தொடுவீரானால், அப்போது அவன் நிச்சயமாய் உம்மை உமது முகத்துக்கு நேரே சபிப்பான்” என்றான்.

6அதற்கு யெகோவா சாத்தானிடம், “சரி, இப்பொழுது அவன் உன் கைகளில் இருக்கிறான்; ஆனாலும் நீ அவனுடைய உயிரை மாத்திரம் தொடாதே” என்றார்.

7எனவே, சாத்தான் யெகோவாவின் சமுகத்தினின்று போய் யோபுவின் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை வேதனைமிக்க கொப்புளங்களால் வாதித்தான். 8யோபு, சாம்பலில் உட்கார்ந்து, உடைந்த ஓட்டை எடுத்து தன்னைச் சுரண்டிக் கொண்டிருந்தான்.

9அப்பொழுது அவனுடைய மனைவி அவனிடம், “நீர் இன்னும் உமது உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? அதைவிட நீர் இறைவனைச் சபித்து உயிரை விடும்” என்றாள்.

10அதற்கு யோபு, “நீ அறிவில்லாத பெண்ணைப்போல் பேசுகிறாய்; இறைவனிடம் நன்மைகளைப் பெற்ற நாம், துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதோ?” என்றான்.

இவையெல்லாவற்றிலும் யோபு தன் பேச்சினால் பாவம் செய்யவில்லை.

11யோபுவுக்கு நேரிட்ட இடர்களையெல்லாம் தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகிய மூன்று நண்பர்களும் கேள்விப்பட்டார்கள். அவர்கள் யோபுவிடம் போய் அவனுக்கு அனுதாபங்காட்டி ஆறுதல் கூறுவதற்காக, தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஒன்றுகூடி வந்தார்கள். 12அவர்கள் தூரத்திலிருந்து யோபுவைக் கண்டபோது, அவர்களால் அவனை இன்னார் என்று அறியமுடியவில்லை. அவர்கள் கதறி அழத்தொடங்கி தங்கள் மேலங்கிகளைக் கிழித்து, தங்கள் தலைகளில் தூசியை வாரியிறைத்தார்கள். 13அவனுடைய வேதனையின் கொடுமையை அவர்கள் கண்டதால், ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அவனுடன் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவனும் அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.