எலிகூ பேசுதல்
1யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அந்த மூன்று நண்பர்களும் யோபுவுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள். 2ஆனால் ராமின் குடும்பத்தைச் சேர்ந்த பூசியனான பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபமூண்டது; ஏனெனில், யோபு இறைவன் நேர்மையானவர் என்று சொல்வதைவிட, தன்னைத்தானே நேர்மையானவன் என்று சொன்னான். 3அத்துடன் யோபுவுக்கு அவனுடைய மூன்று நண்பர்கள் மேலும் கோபம் மூண்டது; ஏனெனில், அவர்கள் யோபுவின் தவறை நிரூபிக்க தகுந்த வழியில்லாமல், அவனைக் கண்டனம் செய்தார்கள். 4எலிகூ யோபுவுடன் பேசுவதற்கு இதுவரையும் காத்திருந்தான்; ஏனெனில் அவர்கள் எல்லோரும் எலிகூவைவிட வயதில் மூத்தவர்கள். 5ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது.
6எனவே பூசியனான பரகெயேலின் மகன் எலிகூ பேசத் தொடங்கினான்:
“நான் வயதில் இளையவன்,
நீங்களோ முதியவர்கள்;
அதினால் நான் அறிந்ததைத் துணிந்து
சொல்லப் பயந்திருந்தேன்.
7‘முதியோர் பேசட்டும்,
வயது சென்றவர்கள் ஞானத்தைப் போதிக்கட்டும்’ என எண்ணியிருந்தேன்.
8மனிதரில் இருக்கும் ஆவியாகிய
எல்லாம் வல்லவரின் சுவாசமே அவனுக்கு அறிவாற்றலைக் கொடுக்கிறது.
9முதியோர் மட்டுமே ஞானிகளல்ல;
வயதானவர்கள் மட்டுமே சரியானதை அறிந்தவர்களுமல்ல.
10“ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்;
எனக்குத் தெரிந்ததை நானும் சொல்வேன்.
11நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து,
உங்கள் காரணத்தை நான் பொறுத்திருந்து,
உங்களுடைய வாதங்களுக்கு நான் செவிகொடுத்தேன்.
12நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன்.
ஆனால் உங்களில் ஒருவராகிலும் யோபு பிழையானவன் என நிரூபிக்கவில்லை;
அவனுடைய வாதங்களுக்குப் பதில் சொல்லவுமில்லை.
13‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல,
இறைவனே நிரூபிக்கட்டும்’ என்று நீங்கள் சொல்லவேண்டாம்.
14யோபு என்னோடு வாதாடவில்லை,
நானும் உங்களின் வாதங்களைக்கொண்டு அவருக்குப் பதிலளிக்கமாட்டேன்.
15“அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்;
அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
16இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில்,
நான் பொறுத்திருக்க வேண்டுமோ?
17இப்பொழுது நானும் பேசியே தீருவேன்;
நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்.
18பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு,
எனக்குள்ளிருக்கும் ஆவி என்னைப் பேசத் தூண்டுகிறது;
19என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும்,
வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது.
20நான் பேசி ஆறுதலடைய வேண்டும்;
என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும்.
21நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ,
எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன்.
22நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால்,
என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக.
1“யோபுவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்;
நான் சொல்வதைக் கவனியும்.
2இப்பொழுது நான் பேசப் போகிறேன்;
என் வார்த்தைகள் என் நாவின் நுனியில் இருக்கின்றன.
3என் வார்த்தைகள் நேர்மையான இருதயத்திலிருந்து வெளிவருகின்றன;
நான் அறிந்தவற்றை என் உதடுகள் உண்மையாய்ப் பேசுகின்றன.
4இறைவனின் ஆவியானவரே என்னைப் படைத்தார்;
எல்லாம் வல்லவரின் சுவாசமே எனக்கு உயிரைத் தருகிறது.
5உம்மால் முடியுமானால் எனக்குப் பதில் கூறும்;
என்னோடு வாதாட உம்மை ஆயத்தப்படுத்தும்.
6இறைவனுக்கு முன்பாக நானும் உம்மைப் போன்றவன்தான்;
நானும் மண்ணிலிருந்தே உருவாக்கப்பட்டேன்.
7என்னைப்பற்றிய பயத்தினால் நீர் கலங்க வேண்டியதில்லை,
என் கையும் உம்மேல் பாரமாயிருக்காது.
8“என் காது கேட்க நீ பேசியிருக்கிறாய்;
நான் கேட்க, உன் வார்த்தைகளினாலேயே இப்படிக் கூறினாய்:
9‘நான் தூய்மையானவன், குற்றமற்றவன்,
நான் சுத்தமானவன், பாவமற்றவன்.
10இருந்தும் இறைவன் என்னிடம் குற்றம் கண்டிருக்கிறார்;
என்னைத் தம் பகைவனாக எண்ணுகிறார்.
11அவர் என் கால்களை விலங்குகளில் மாட்டுகிறார்;
என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.’
12“ஆனால் நான் உமக்குச் சொல்கிறேன், இதில் நீர் சொன்னது சரியல்ல,
ஏனெனில் இறைவன் மனிதனைவிட மிகவும் பெரியவர்.
13அவர் மனிதனுடைய கேள்விகள் எதற்குமே பதிலளிக்கவில்லை
என நீர் ஏன் முறையிடுகிறீர்?
14மனிதர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும்,
இறைவன் ஒருவிதமாகவும், இன்னொரு விதமாகவும் பேசுகிறார்.
15மனிதர் படுத்திருக்கையில்,
ஆழ்ந்த நித்திரையிலும், கனவிலும்,
இரவு தரிசனத்திலும் அவர் பேசுகிறார்.
16அவர் மனிதர்களின் காதுகளில் பேசி,
தம்முடைய எச்சரிப்புகளினால் அவர்களைத் திகிலூட்டக்கூடும்.
17பிழை செய்வதிலிருந்து மனிதரை விலக்கவும்,
தற்பெருமையை தடுக்கவுமே இவ்வாறு செய்கிறார்.
18மனிதருடைய ஆத்துமா பிரேதக்குழியில் விழாதபடியும்,
அவர்களுடைய உயிர் வாளால் அழியாதபடியும் காப்பாற்றுகிறார்.
19“அல்லது மனிதர்கள் தங்கள் எலும்புகளில் உண்டான
தொடர்ச்சியான நோவுடன் படுக்கையிலேயே தண்டிக்கப்படக் கூடும்.
20அப்பொழுது அவர்களுடைய உள்ளம் உணவையும்,
சுவையான உணவையும் வெறுக்கிறது.
21அவர்களுடைய சதை முழுவதும் அழிந்து,
முன்பு மறைந்திருந்த எலும்புகள் வெளியே தெரிகின்றன.
22அவர்களுடைய ஆத்துமா பிரேதக் குழியையும்,
அவர்களுடைய உயிர் மரண தூதுவர்களையும் நெருங்குகிறது.
23ஆனாலும் ஆயிரத்தில் ஒருவனான தூதன் ஒருவன்
அவர்கள் பக்கத்திலிருந்து, அவர்களுக்காகப் பரிந்துபேசி,
அவர்களுக்கு சரியானவற்றைச் சொல்லிக்கொடுத்து,
24அவர்களுக்குக் கிருபைகாட்டி,
‘நான் அவர்களுக்கு மீட்கும் பொருளைக் கண்டுபிடித்தேன்.
ஆகவே இவர்களைக் குழிக்குள் போவதிலிருந்து தப்பவிடும்’ என்று சொல்வானாகில்,
25அவர்களின் உடல் குழந்தையின் உடலைப்போல் புதிதாகும்,
அவர்கள் வாலிப நாட்களில் இருந்ததுபோல் மாற்றப்படுவார்கள்.
26அப்பொழுது அவர்கள் இறைவனை நோக்கி மன்றாடி,
அவரிடமிருந்து தயவு பெறுகிறார்கள்;
அவர்கள் இறைவனுடைய முகத்தைக் கண்டு மகிழ்வார்கள்,
இறைவன் அவர்களுடைய நீதியின் நிலையிலேயே திரும்பவும் வைக்கிறார்.
27அவர்கள் மற்றவர்களைப் பார்த்து:
‘நான் பாவம் செய்து, நியாயத்தைப் புரட்டினேன்,
செய்ததற்குத் தகுந்த தண்டனையை நான் பெறவில்லை.
28பிரேதக் குழிக்குள் போகாமல் என் ஆத்துமாவை இறைவனே மீட்டுக்கொண்டார்;
நானும் ஒளியை அனுபவித்து சந்தோஷமாய் வாழ்வேன்.’
29“இறைவன் இவற்றையெல்லாம் மனிதருக்கு இரண்டு முறைகள், ஏன்,
மூன்று முறைகள் திரும்பத் திரும்பச் செய்கிறார்.
30குழியிலிருந்த அவர்களுடைய ஆத்துமாவை,
வாழ்வின் ஒளியால் பிரகாசிக்கச் செய்கிறார்.
31“யோபுவே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேளும்;
மவுனமாய் இரும், நான் பேசுவேன்.
32அதின்பின் ஏதாவது சொல்ல இருந்தால் எனக்குப் பதில் கூறும்;
தயங்காமல் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க நான் விரும்புகிறேன்.
33அப்படியில்லாவிட்டால், மவுனமாய் இருந்து நான் சொல்வதைக் கேளும்.
நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்.”
1தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
2“ஞானமுள்ள மனிதர்களே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்;
கல்விமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
3நாவு உணவைச் சுவைப்பதுபோல்,
காது வார்த்தைகளை நிதானிக்கிறது.
4வாருங்கள், சரியானது எது என்பதை நாம் நிதானிப்போம்;
எது நல்லது என்பதை நாம் ஒன்றாய்க் கற்றுக்கொள்வோம்.
5“யோபுவோ, ‘நான் குற்றமற்றவன்,
இறைவன் எனக்கு நீதிவழங்க மறுக்கிறார்.
6நான் சரியானவனாய் இருந்தபோதிலும்,
பொய்யனாகவே எண்ணப்படுகிறேன்.
குற்றமற்றவனாய் இருந்தபோதிலும்,
அவருடைய அம்பு ஆறாதப் புண்ணை உண்டுபண்ணுகிறது’ என்கிறார்.
7தண்ணீர் பருகுவதைப்போல்
கேலிசெய்யும் யோபுவைப் போன்றவர் உண்டோ?
8அவர் தீமை செய்கிறவர்களின் கூட்டத்தில் சேர்ந்து,
கொடிய மனிதர்களுடன் வாசம்பண்ணுகிறார்.
9ஏனெனில் அவர், ‘இறைவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிப்பதினால்
ஒரு பயனும் இல்லை’ என்கிறாரே.
10“புத்திமான்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
தீமை இறைனுக்கும்,
அநீதி எல்லாம் வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.
11மனிதருடைய செய்கைக்குத் தக்கதாக அவர் பலனளிக்கிறார்.
அவர்களுடைய நடக்கைக்குத் தகுந்ததை அவர் அவர்களுக்கு வரப்பண்ணுகிறார்.
12இறைவன் அநியாயம் செய்யாமலும்,
எல்லாம் வல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே.
13பூமியின் மேலாக மனிதரை நியமித்தவர் யார்?
முழு உலகத்தையும் அவர்களுடைய பொறுப்பில் கொடுத்தவர் யார்?
14அவர் தமது ஆவியையும் தமது சுவாசத்தையும்
திரும்ப எடுத்துக்கொள்ள நோக்கங்கொண்டால்,
15எல்லா மனுக்குலமும் ஒன்றாய் அழிந்துபோகும்;
மனிதர்களும் மண்ணுக்குத் திரும்புவார்கள்.
16“உமக்கு விளங்கும் ஆற்றல் இருந்தால் இதைக் கேளும்,
நான் சொல்வதற்குச் செவிகொடும்.
17நீதியை வெறுப்பவன் ஆள முடியுமோ?
நீர் நீதியும் வல்லமையுமுள்ளவரை குற்றப்படுத்துவீரோ?
18அரசர்களைப் பார்த்து, ‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்,’ என்றும்,
உயர்குடி மக்களைப் பார்த்து, ‘நீங்கள் கொடியவர்கள்’ என்றும் சொல்வார்.
19அவர் இளவரசர்களுக்குப் பாரபட்சம் காட்டுவதில்லை,
ஏழையைவிட செல்வந்தனுக்குத் தயவு காட்டுவதுமில்லை;
ஏனெனில், அவர்கள் எல்லோருமே அவருடைய கரங்களின் படைப்பல்லவா?
20அவர்கள் நள்ளிரவில் ஒரு நொடியில் சாகிறார்கள்;
அசைக்கப்பட்டு இல்லாமல் போகிறார்கள்;
பலவான்களும் மனித கரமல்லாத ஒரு கரத்தினால் அகற்றப்படுகிறார்கள்.
21“இறைவனுடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது;
அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
22தீமை செய்கிறவர்கள் தங்களை ஒளித்துக்கொள்வதற்கு
இருளான இடமோ, காரிருளோ இல்லை.
23இறைவன் மனிதரை மேலும் சோதிக்கமாட்டார்;
அவர்கள் அவர்முன் வழக்காடவேண்டிய அவசியமும் இல்லை.
24இறைவன் விசாரணையின்றியே வல்லமையுள்ளவர்களைச் சிதறடித்து,
அவர்களுக்குரிய இடத்தில் வேறு மனிதரை அமர்த்துகிறார்.
25ஏனெனில், அவர் அவர்களுடைய செயல்களைக் குறித்துக்கொள்கிறார்;
இரவில் அவர்களைக் கவிழ்க்கிறார், அவர்கள் நசுங்கிப் போகிறார்கள்.
26அவர் அவர்களின் கொடுமையின் நிமித்தம்,
எல்லோரும் காணும்படியாக அவர்களைத் தண்டிக்கிறார்.
27ஏனெனில் அவர்கள் இறைவனைப் பின்பற்றுவதிலிருந்து விலகி,
அவருடைய வழிகளை மதியாமல் போகிறார்கள்.
28அவர்கள் ஏழைகளின் அழுகுரலை இறைவனுக்கு சேரவைத்தனர்;
அவர் அவர்களின் அழுகையைக் கேட்டார்.
29மவுனமாய் இருக்கிறவரைக் குற்றப்படுத்தாதே;
நாட்டிற்கும், மனிதனுக்கும்,
அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்?
30அதினால் இறைவனற்றவர்கள் ஆட்சிசெய்யாமலும்,
மக்கள் கண்ணியில் சிக்காமலும் தடுக்கிறார்.
31“யாராவது இறைவனிடம் இப்படிக் கேட்பதுண்டா:
‘நான் குற்றவாளி, இனிப் பாவம் செய்யமாட்டேன்.
32நான் காணாதவற்றை எனக்குப் போதியும்,
நான் அக்கிரமம் செய்திருந்தால் இனிமேல் அதைச் செய்யமாட்டேன்.’
33நீர் மனந்திரும்ப மறுக்கும்போது
உமது மன எண்ணப்படி இறைவன் வெகுமதி கொடுக்கவேண்டுமோ?
நானல்ல, நீரே தீர்மானித்துக்கொள்ளும்;
நீர் அறிந்ததை எனக்குச் சொல்லும்.
34“நான் சொல்வதைக் கேட்ட விளங்கும் ஆற்றலுள்ளவர்களும்
ஞானமுள்ளவர்களும் என்னிடம்,
35‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்;
அவருடைய வார்த்தைகள் ஞானமில்லாதவை என்றும்,
36யோபு கொடியவரைப்போல் பேசியதற்காக
முற்றிலும் சோதிக்கப்பட வேண்டும்.
37தம்முடைய பாவத்துடன் மீறுதலையும் சேர்த்துக் கொள்கிறார்;
அவர் எங்கள் மத்தியில் ஏளனமாய்க் கைகொட்டி,
இறைவனுக்கு விரோதமான வார்த்தைகளைப் பேசினார்’ என்று என்னிடம் சொல்கிறார்கள்.”
1தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
2“ ‘என் நீதி இறைவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியது,’ என்று
நீர் சொல்வது நியாயம் என்று நினைக்கிறீரோ?
3நீர், ‘நான் பாவம் செய்யாதிருப்பதால் எனக்கு என்ன பலன்?
என்ன இலாபம்?’ என்று இறைவனிடம் கேட்கிறீர்.
4“இப்பொழுது நான் உமக்கும் உம்மோடிருக்கும் உமது சிநேகிதருக்கும்
பதில்சொல்ல விரும்புகிறேன்.
5வானங்களை மேலே நோக்கிப்பாரும்;
உமக்கு மேலாக மிக உயரத்தில் இருக்கும் மேகங்களையும் உற்றுப் பாரும்.
6நீர் பாவம்செய்தால் அது அவரை எப்படிப் பாதிக்கும்?
உன் பாவங்கள் அதிகமானாலும் அவை அவரை என்ன செய்யும்?
7நீ நேர்மையானவனாக இருந்தால் நீர் அவருக்கு எதைக் கொடுக்கிறீர்?
அல்லது அவர் உம் கையில் இருந்து எதைப் பெற்றுக்கொள்கிறார்?
8உம்முடைய கொடுமைகள் உம்மைப்போன்ற மனிதருக்குப் பாதிப்பையும்,
உம்முடைய நீதி மனுமக்களுக்கு நன்மையையும் அளிக்கும்.
9“ஒடுக்குதலின் மிகுதியால் மனிதர் கதறுகிறார்கள்;
பலவானின் கரத்திலிருந்து விடுதலைக்காக கதறுகிறார்கள்.
10ஆனால், ‘என்னைப் படைத்த இறைவன் எங்கே?
இரவிலே பாடல்களைத் தருபவர் எங்கே?
11பூமியின் மிருகங்களைவிட நமக்கு அதிகமாகப் போதிப்பவர் எங்கே?
ஆகாயத்துப் பறவைகளைவிட நம்மை ஞானிகள் ஆக்குகிறவர் எங்கே?’
என்று கேட்பவர் ஒருவருமில்லை.
12கொடியவர்களின் அகந்தையின் நிமித்தம்,
மனிதர் அழும்போது இறைவன் அவர்களுக்குப் பதில் கொடுப்பதில்லை.
13இறைவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்;
எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கமாட்டார்.
14அப்படியிருக்கையில், நீர் அவரைக் காணவில்லை என்றும்,
உமது வழக்கு அவர் முன்னால் இருக்கிறது என்றும்,
நீர் அவருக்காகக் காத்திருக்கவேண்டும் என்றும் சொல்கிறபோது,
அவர் உமக்குச் செவிகொடுப்பாரோ?
15மேலும், அவருடைய கோபம் மனிதரைத் தண்டிப்பது இல்லை;
என்றும் மனிதரின் கொடுமையை அவர் கொஞ்சமும் கவனிப்பதில்லை என்று எண்ணி,
16யோபு தன் வாயைத் திறந்து வீணாய்ப் பேசி,
அறிவில்லாமல் தன் வார்த்தைகளை வசனிக்கிறார்.”
1தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
2“சற்று என்னிடம் பொறுமையாயிரும்,
இறைவன் சார்பாய் நான் சொல்ல வேண்டியவற்றை நான் உமக்குக் காண்பிப்பேன்.
3நான் அதிக தூரத்திலிருந்து என் அறிவைப் பெறுகிறேன்;
என்னைப் படைத்தவருக்கே நீதி உரியது என்றும் நிரூபிப்பேன்.
4என் வார்த்தைகள் பொய்யானவையல்ல என்று உறுதியாய்க் கூறுகிறேன்;
பூரண அறிவுள்ள நான் உம்மோடு பேசுகிறேன்.
5“இறைவன் வல்லமையுள்ளவர், ஆகிலும் அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்;
வல்லமையுள்ள அவர் தமது நோக்கத்தில் உறுதியுள்ளவர்.
6அவர் கொடியவர்களை உயிர்வாழ விடுவதில்லை;
துன்பப்படுகிறவர்களுக்கோ அவர்களுடைய உரிமைகளை வழங்குகிறார்.
7அவர் நேர்மையானவர்கள் மேலிருந்து தன் கண்களை அகற்றுவதில்லை;
அவர் அவர்களை அரசர்களோடு அரியணையில் அமர்த்தி,
அவர்களை என்றைக்கும் மேன்மைப்படுத்துகிறார்.
8ஆனால் மனிதர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு,
வேதனையின் கயிற்றினால் இறுக்கப்பட்டிருக்கும்போது,
9அவர்கள் செய்தவற்றை இறைவன் அவர்களுக்குக் கூறுவார்.
அதாவது அவர்கள் அகந்தையாய் பாவம் செய்ததை அவர் சொல்வார்.
10அவர் அவர்கள் சீர்திருந்துதலுக்குச் செவிகொடுத்து,
தங்கள் தீமையிலிருந்து மனந்திரும்ப கட்டளையிடுகிறார்.
11அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குப் பணிசெய்தால்,
அவர்கள் தங்கள் மீதியான நாட்களைச் செல்வத்திலும்,
மீதியான வருஷங்களை மனநிறைவிலும் கழிப்பார்கள்.
12அடங்கி அவருக்குப் பணிசெய்யாவிட்டால்,
வாளினால் அழிந்து,
அறிவில்லாமலே சாவார்கள்.
13“உள்ளத்தில் இறைவனற்றவர்கள் கோபத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்;
அவர் அவர்களுக்கு விலங்கிடும்போதும் அவர்கள் உதவிக்காக அழுவதில்லை.
14அவர்கள் கோவில்களிலிருக்கும் ஆண் விபசாரக்காரர் மத்தியில்
தங்கள் இளமையிலேயே சாவார்கள்.
15ஆனாலும் துன்பப்படுகிறவர்களை அவர் துன்பத்திலிருந்து விடுவித்து,
அவர்களுடைய வேதனையில் அவர் அவர்களோடு பேசுகிறார்.
16“யோபுவே, இறைவன் உன்னைக் கட்டுப்பாடற்ற விசாலமான இடத்திற்கு கொண்டுவரவும்,
சுவையான உணவுகள் நிறைந்த பந்தியில் அமர்த்தவும்,
வேதனையின் பிடியிலிருந்து உன்னை விடுவிக்கவும் முயற்சிக்கிறார்.
17கொடியவர்கள்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறக் காத்திருக்கிறீர்;
நியாயத்தீர்ப்பும் நீதியுமே உம்மை ஆதரிக்கும்.
18செல்வங்களினால் ஒருவரும் உம்மைக் கவராதபடி எச்சரிக்கையாயிரும்;
பெரிதான இலஞ்சம் உம்மை வழிவிலகிச் செல்ல இடங்கொடாதே.
19உமது செல்வங்களும் வல்லமையான எல்லா முயற்சிகளும்
நீர் துன்பத்தில் அகப்படாதபடி உம்மைத் தாங்குமோ?
20மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதற்காக
நீர் இரவை வாஞ்சிக்காதிரும்.
21தீமைசெய்யத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்;
ஏனெனில், நீர் துன்பத்தைவிட தீமையை தெரிந்துகொண்டீர்.
22“இறைவன் தமது வல்லமையில் உயர்த்தப்பட்டிருக்கிறார்.
அவரைப்போல் போதிக்கிறவர் யார்?
23இறைவனுக்கு அவருடைய வழியைக் குறித்துக் கொடுத்தது யார்?
அல்லது ‘நீர் அக்கிரமம் செய்தீர்’ என்று சொல்லியது யார்?
24மனிதர்கள் புகழ்ந்து பாடும் பாடல்களால்
அவருடைய செயலை மேன்மைப்படுத்த நினைவுகூரும்.
25அவர் செய்வதை எல்லா மனிதரும் காண்கிறார்கள்;
அதைத் தூரத்திலிருந்து உற்றுப் பார்க்கிறார்கள்;
26நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்!
அவருடைய வருடங்களும் எண்ணிட முடியாதவை.
27“அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து,
அவற்றை ஆறுகளில் மழையாகப் பெய்யச் செய்கிறார்.
28மேகங்கள் மழையைப் பொழிகின்றன,
அது மனிதர்மேல் தாரையாய்ப் பொழிகிறது.
29அவர் மேகங்களை எப்படி பரவுகிறார் என்றும்,
எப்படி முழங்குகிறார் என்றும் யாரால் விளங்கிக்கொள்ள முடியும்?
30அவர் தமது மின்னலைத் தம்மைச் சுற்றிலும் சிதறப்பண்ணி,
கடலின் ஆழங்களை எப்படி மூடுகிறார் என்று பாரும்.
31இவ்விதமாகவே அவர் மக்களை ஆளுகைசெய்து,
ஏராளமான உணவையும் கொடுக்கிறார்.
32அவர் தம் கரங்களை மின்னலினால் நிரப்பி,
குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்படி அதற்குக் கட்டளையிடுகிறார்.
33அவருடைய இடிமுழக்கம் வரப்போகும் புயலை அறிவிக்கிறது;
அதின் வருகையை மந்தைகள்கூடத் தெரிவிக்கும்.
1“அந்த முழக்கத்தினால் என் இருதயம் நடுங்கி,
அதின் இடத்தைவிட்டுத் துடிக்கிறது.
2இறைவனுடைய குரலின் கர்ஜனையையும்,
அவர் வாயிலிருந்து வரும் முழக்கத்தையும் கேளுங்கள்.
3வானத்தின் கீழெங்கும் தமது மின்னலைக் கட்டவிழ்த்து,
அதைப் பூமியின் கடைமுனைகளுக்கும் அனுப்புகிறார்.
4பின்பு அவருடைய கர்ஜனையின் சத்தம் வருகிறது,
அவர் தனது கெம்பீரமான குரலினால் முழங்குகிறார்;
அவருடைய சத்தம் தொனிக்கும்போது
அவர் ஒன்றையும் அடக்குவதில்லை.
5இறைவனது குரல் ஆச்சரியமான விதங்களில் முழங்குகிறது;
அவர் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத அளவு பெரிய காரியங்களைச் செய்கிறார்.
6அத்துடன் அவர் பனியைப் பார்த்து, ‘பூமியின்மேல் விழு’ என்றும்,
மழையைப் பார்த்து, ‘கடுமையாய்ப் பெய்’ என்றும் கூறுகிறார்.
7அவ்வேளைகளில் அவர் தாம் படைத்த எல்லா மனிதர்களும் தமது செயலை அறியும்படி,
ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய வேலையிலிருந்து நிறுத்துகிறார்.
8காட்டு மிருகங்கள் குகைகளுக்குள் சென்று,
தங்கள் கெபிகளில் தங்குகின்றன.
9தெற்கிலிருந்து சூறாவளியும்,
வடதிசை காற்றினால் குளிரும் வருகிறது.
10இறைவனின் சுவாசத்தால் பனிக்கட்டி உருவாகிறது;
அப்பொழுது பரந்த நீர்ப்பரப்புகளும் உறைந்துபோகின்றன.
11அவர் மேகங்களை ஈரத்தினால் பாரமாக்கி,
தமது மின்னலை அவற்றினுள் சிதறப்பண்ணுகிறார்.
12அவரின் திசையில் மேகங்கள் சுழல்கின்றன;
அவை பூமியின் மேற்பரப்பெங்கும்
அவர் கட்டளையிடுவதைச் செய்கின்றன.
13மனிதரைத் தண்டிப்பதற்கோ,
அல்லது தனது பூமியை வளமுள்ளதாக்கி தமது அன்பைக் காட்டுவதற்கோ
அவர் மேகங்களைக் கொண்டுவருகிறார்.
14“யோபுவே, இதைக் கேளும்;
சற்று நின்று இறைவனின் அதிசயங்களைக் கவனித்துப் பாரும்.
15இறைவன் மேகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி
தமது மின்னலை மின்னப் பண்ணுகிறார் என்று உமக்குத் தெரியுமா?
16அவர் மேகங்களை எப்படி ஆகாயத்தில் தொங்கவிட்டிருக்கிறார் என்பதையும்,
பூரண அறிவுள்ளவரின் அதிசயங்களையும் நீர் அறிவீரோ?
17தென்றலினால் பூமி அடங்கிக் கிடக்கும்போது,
உமது ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையை அறிவீரோ?
18வார்க்கப்பட்ட வெண்கல கண்ணாடியைப் போன்ற,
கடினமான ஆகாயத்தை அவருடன் சேர்ந்து உம்மால் விரிக்க முடியுமோ?
19“அவருக்குச் சொல்லவேண்டியதை நீர் எங்களுக்குச் சொல்லும்;
இருளின் காரணமாக எங்களால் வழக்காட முடியாதிருக்கிறது.
20‘நான் பேச விரும்புகிறேன்’ என்று அவருக்குச் சொல்லலாகுமோ?
தான் விழுங்கப்படுவதை எவனும் விரும்பிக் கேட்பானோ?
21காற்று ஆகாயத்தைச் சுத்தப்படுத்திய பின்,
சூரியனை எந்த மனிதனாலும் பார்க்க முடியாதே!
ஏனெனில் அதின் ஒளி பிரகாசமாயிருக்கும்.
22வடக்கிலிருந்து தங்கமயமான மகிமையிலே அவர் வருகிறார்;
திகைப்பூட்டும் மாட்சிமையுடன் இறைவன் வருகிறார்.
23எல்லாம் வல்லவர் நமக்கு எட்டாத தூரத்திலே
அவர் வல்லமையில் உயர்ந்திருக்கிறார்;
அவர் நீதியும் நியாயமும் நிறைந்தவர்; அவர் ஒடுக்குகிறதில்லை.
24ஆகையால், மனிதர்கள் அவரிடம் பயபக்தியாயிருக்கிறார்கள்;
ஏனெனில், இருதயத்தில் ஞானமுள்ள ஒருவரையும் அவர் மதிப்பதில்லை.”


