யோபு
1பின்பு யோபு மறுமொழியாக சொன்னது:
2“நீங்கள் பெரியவர்கள், சந்தேகம் இல்லை.
ஞானமும் உங்களுடனே செத்துவிடும்!
3எனக்கும் உங்களைப்போல் ஒரு மனம் உண்டு;
நான் உங்களுக்குக் குறைந்தவனல்ல;
இவற்றையெல்லாம் அறியாதவன் யார்?
4“நான் இறைவனை நோக்கிக் கூப்பிடுவேன், அவர் பதிலளிப்பார்;
நான் நீதிமானும், குற்றமற்றவனுமாய் இருந்தபோதிலும்,
என் நண்பர்களின் சிரிப்பிற்கு ஆளாகிவிட்டேன்.
5சுகவாழ்வுள்ள மனிதர்கள் அவலத்தை வெறுக்கிறார்கள்;
அவர்கள் அது, கால் இடறுகிறவர்களின் விதி என்று எண்ணுகிறார்கள்.
6திருடர்களுடைய கூடாரங்கள் குழப்பமின்றி இருக்கின்றன;
தெய்வத்தைத் தங்கள் கைகளிலேந்திச் செல்கிறவர்களும்,
இறைவனைக் கோபமூட்டுகிறவர்களும் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
7“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள்; அவை உங்களுக்குப் போதிக்கும்,
ஆகாயத்துப் பறவைகளைக் கேளுங்கள்; அவை உங்களுக்குச் சொல்லித் தரும்.
8பூமியுடன் பேசுங்கள், அது உங்களுக்குப் போதிக்கும்.
அல்லது கடல் மீன்களே உங்களுக்கு அறிவிக்கட்டும்.
9யெகோவாவின் கரமே இதைச் செய்தது
என்பதை இவற்றுள் எது அறியாதிருக்கிறது?
10ஒவ்வொரு உயிரினங்களின் உயிரும்,
எல்லா மனிதரின் சுவாசமும் அவரின் கையிலேயே இருக்கின்றன.
11நாவு உணவை ருசிப்பதுபோல,
காது சொற்களைச் சோதிக்கிறது அல்லவோ?
12முதியோரிடத்தில் ஞானம் இருக்கும்.
வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
13“ஞானமும் வல்லமையும் இறைவனுக்கு உரியன;
ஆலோசனையும், விளங்கும் ஆற்றலும் அவருடையனவே.
14அவர் இடித்தால் கட்டமுடியாது;
அவர் சிறைப்படுத்தும் மனிதனை விடுவிக்கவும் முடியாது.
15தண்ணீரை அவர் தடுத்தால், அங்கு வறட்சி உண்டாகிறது;
அவர் தண்ணீரைத் திறந்துவிடும்போது அது நாட்டை அழிக்கிறது.
16பெலமும் வெற்றியும் அவருக்குரியன;
ஏமாற்றுகிறவனும், ஏமாறுகிறவனுமான இருவருமே அவருடையவர்கள்.
17அவர் ஆலோசகர்களின் ஞானத்தை அகற்றி அனுப்பி விடுகிறார்;
நீதிபதிகளையும் மூடராக்குகிறார்.
18அரசர்களுடைய கட்டுகளை அவர் அவிழ்த்து,
அவர்கள் இடுப்புகளில் துணியைக் கட்டுகிறார்.
19அவர் ஆசாரியர்களை நீக்கி,
நீண்டகால அதிகாரிகளைக் கவிழ்க்கிறார்.
20அவர் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களின் உதடுகளை மவுனமாக்குகிறார்;
முதியோரின் நிதானத்தையும் எடுத்துப் போடுகிறார்.
21அவர் உயர்குடி மக்கள்மேல் இகழ்ச்சியை ஊற்றி
பலவானைப் பலமிழக்கச் செய்கிறார்.
22அவர் இருளின் ஆழ்ந்த செயல்களை வெளிப்படுத்துகிறார்;
இருளின் ஆழத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.
23அவர் மக்களைப் பெரிதாக்கி, அவர்களை அழிக்கிறார்;
மக்களை விரிவாக்கி அவர்களைச் சிதறப்பண்ணுகிறார்.
24பூமியின் தலைவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்கப்பண்ணுகிறார்;
பாதையில்லாத பாழிடங்களில் அவர்களை அலையப்பண்ணுகிறார்.
25அவர்கள் வெளிச்சமில்லாமல் இருளில் தடவித் திரிகிறார்கள்;
வெறியரைப்போல் அவர்களைத் தள்ளாட வைக்கிறார்.
1“இவை எல்லாவற்றையும் என் கண் கண்டிருக்கின்றது,
என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
2உங்களுக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்கும் தெரியும்;
நான் உங்களைவிட தாழ்ந்தவனல்ல.
3ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு பேசவும்,
இறைவனோடு என் வழக்கை வாதாடவும் விரும்புகிறேன்.
4எப்படியும் நீங்கள் என்னைப் பொய்களால் மழுப்புகிறீர்கள்;
நீங்கள் எல்லோரும் ஒன்றுக்கும் உதவாத மருத்துவர்கள்.
5நீங்கள் பேசாமல் மட்டும் இருப்பீர்களானால்,
அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
6இப்பொழுது என் விவாதத்தைக் கேளுங்கள்;
என் உதடுகளின் முறையிடுதலுக்குச் செவிகொடுங்கள்.
7இறைவனின் சார்பாக கொடுமையாய்ப் பேசுவீர்களோ?
அவருக்காக நீங்கள் வஞ்சகமாய்ப் பேசுவீர்களோ?
8அவருக்கு நீங்கள் பட்சபாதம் காட்டுவீர்களோ?
இறைவனுக்காக வழக்கை வாதாடுவீர்களோ?
9அவர் உங்களைச் சோதித்தால், உங்களுக்கு நலமாகுமோ?
மனிதரை ஏமாற்றுவதுபோல் அவரை ஏமாற்ற முடியமோ?
10நீங்கள் இரகசியமாய் பட்சபாதம் காட்டினாலும்,
அவர் நிச்சயமாக உங்களைக் கண்டிப்பார்.
11அவருடைய மகத்துவம் உங்களுக்குத் திகிலூட்டாதோ?
அவருடைய பயங்கரம் உங்கள்மேல் வராதோ?
12உங்கள் கொள்கைகள் சாம்பலை ஒத்த பழமொழிகள்;
உங்கள் எதிர்வாதங்களும் களிமண்ணுக்கு ஒப்பானது.
13“பேசாமல் இருங்கள், என்னைப் பேசவிடுங்கள்;
அதின்பின் எனக்கு வருவது வரட்டும்.
14ஏன் நான் என்னையே இடரில் மாட்டி,
உயிரைக் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.
15அவர் என்னைக் கொன்றாலும், நான் இன்னும் அவரிலேயே நம்பிக்கையாயிருப்பேன்;
ஆனாலும் என் வழிகளை அவர்முன் குற்றமற்றவை என வாதாடுவேன்.
16இது என் விடுதலைக்குக் காரணமாகும்,
இறைவனற்றவன் அவர்முன் சேரமாட்டான்.
17நான் பேசப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்;
நான் சொல்வதை உங்கள் செவி ஏற்றுக்கொள்ளட்டும்.
18எனது வழக்கு ஆயத்தம்,
நான் குற்றமற்றவனென நிரூபிக்கப்படுவேன் என்பது எனக்குத் தெரியும்.
19எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர யாரால் முடியும்?
அப்படியானால், நான் மவுனமாயிருந்தே சாவேன்.
20“இறைவனே, இந்த இரண்டு காரியங்களை மட்டும் கொடுத்தருளும்,
அப்பொழுது நான் உம்மிடமிருந்து மறைந்து கொள்ளமாட்டேன்:
21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்,
உமது பயங்கரங்களால் என்னைத் திகிலடையச் செய்யாதீர்.
22அதின்பின் என்னைக் கூப்பிடும்; நான் பதில் சொல்வேன்,
அல்லது என்னைப் பேசவிட்டு நீர் பதில் கொடும்.
23அநேக பிழைகளையும் பாவங்களையும் நான் செய்திருக்கிறேன்?
என் குற்றத்தையும், என் பாவத்தையும் எனக்குக் காட்டும்.
24நீர் ஏன் உமது முகத்தை மறைத்து,
என்னை உமது பகைவனாகக் கருதுகிறீர்?
25காற்றில் பறக்கும் சருகை வேதனைப்படுத்துவீரோ?
பதரைப் பின்னால் துரத்திச்செல்வீரோ?
26ஏனெனில் எனக்கெதிராகக் கசப்பானவற்றை நீர் எழுதுகிறீர்;
என் வாலிப காலத்தின் பாவங்களை எனக்குப் அறுக்கச்செய்கிறீர்.
27நீர் எனது கால்களில் விலங்குகளை மாட்டுகிறீர்,
அடிச்சுவடுகளில் அடையாளமிட்டு
என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறீர்.
28“ஆகவே அழுகிப்போன ஒன்றைப் போலவும்,
பூச்சி அரித்த உடையைப்போலவும் மனிதன் உருக்குலைந்து போகிறான்.
1“பெண்ணினால் பெற்றெடுக்கப்பட்ட மனிதன் சில நாட்களே வாழ்கிறான்,
அவையும் கஷ்டம் நிறைந்தவையே.
2அவன் ஒரு பூவைப்போல் பூத்து வாடிப்போகிறான்;
அவன் நிழலைப்போல் நிலையற்று மறைந்துபோகிறான்.
3அப்படிப்பட்டவனை நீர் கூர்ந்து கவனிப்பீரோ?
அவனை நியாயந்தீர்ப்பதற்காக உமக்கு முன்பாகக் கொண்டுவருவீரோ?
4அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை உருவாக்க யாரால் முடியும்?
யாராலுமே முடியாது!
5மனிதனுடைய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன;
அவனுடைய மாதங்களையும் நீரே நிர்ணயித்திருக்கிறீர்,
அவன் கடக்கமுடியாத எல்லைகளைக் குறித்திருக்கிறீர்.
6ஒரு கூலியாள் தன் அன்றாட வேலை முடிந்தது என்று நிம்மதியாய் இருக்கிறானே.
அதுபோல் நீரும் மனிதன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.
7“மரத்திற்குக்கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டு:
அது வெட்டிப்போடப்பட்டாலும் மீண்டும் தழைக்கும்;
அதின் புதிய தளிர்கள் தவறாது முளைக்கும்.
8அதின் வேர் நிலத்தினடியில் பழையதாகி,
அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,
9தண்ணீர் பட்டவுடனே அது துளிர்விட்டு
ஒரு செடியைப்போல் கிளைவிட்டு வளரும்.
10மனிதனோ இறந்தபின்,
தன் இறுதி மூச்சைவிட்டு இல்லாதொழிந்து போகிறான்.
11கடல் தண்ணீர் வற்றி,
வெள்ளம் வறண்டு கிடப்பதுபோலவும்
12மனிதன் படுத்துக்கிடக்கிறான்,
அவன் வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை;
தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை.
13“நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து,
உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து,
நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து,
அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே!
14ஒரு மனிதன் இறந்துபோனால் திரும்பவும் அவன் வாழ்வானோ?
ஆனாலும் என் கடின உழைப்பின் நாட்களிலெல்லாம்
நான் எனது விடுதலைக்காகக் காத்திருப்பேன்.
15அப்பொழுது நீர் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன்,
நீர் உமது கரங்களின் படைப்பாகிய என்மேல் வாஞ்சையாயிருப்பீர்.
16நிச்சயமாக நீர் என் காலடிகளைக் கணக்கிடுவீர்;
என் பாவத்தையோ கவனத்தில் கொள்ளமாட்டீர்.
17எனது குற்றங்கள் பையில் இடப்பட்டு முத்திரையிடப்படும்;
நீர் எனது பாவங்களை மூடி மறைப்பீர்.
18“ஆனால் மலை இடிந்து விழுந்து கரைவதுபோலவும்,
பாறை தன் இடத்தைவிட்டு நகருவதுபோலவும்,
19தண்ணீர் கற்களை அரிப்பதுபோலவும்,
வெள்ளம் மணலை அடித்துச்செல்வது போலவும்
மனிதனின் எதிர்பார்ப்பை நீர் அழித்துப் போடுகிறீர்.
20நீர் அவனை ஒரேயடியாக மேற்கொள்கிறீர், அவன் இல்லாமல் போகிறான்;
நீர் அவன் முகத்தோற்றத்தை வேறுபடுத்தி, அவனை விரட்டிவிடுகிறீர்.
21அவனுடைய மகன்கள் மேன்மையடைந்தாலும், அவன் அதை அறியான்;
அவர்கள் தாழ்த்தப்பட்டாலும், அதையும் அவன் காணமாட்டான்.
22ஆனால் தன் சொந்த உடலின் நோவை மட்டுமே அறிவான்,
அவன் தனக்காக மாத்திரமே துக்கப்படுகிறான்.”


