செல்வந்தனும் லாசருவும்

19“ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான உடை உடுத்தி, ஒவ்வொரு நாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான். 20அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய், 21பணக்காரனின் மேஜையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களுங்கூட வந்து, அவன் புண்களை நக்கின.

22“காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்தான். தேவதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய், ஆபிரகாமின் மடியிலே அமர்த்தினார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம்பண்ணப்பட்டான். 23அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். 24எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவனைக் கூப்பிட்டு, ‘என்னில் இரக்கம் கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி, அவனை அனுப்பும். நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான்.

25“அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மகனே, நீ உன் வாழ்நாட்களில் நலன்களையே அனுபவித்தாய் என்பதை நினைவிற்கொள். லாசருவோ, இன்னல்களையே அனுபவித்தான். இப்பொழுது அவன், இங்கு ஆறுதல் பெறுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய். 26இவை எல்லாவற்றையும் தவிர, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இங்கிருந்து உங்களிடத்திற்குக் கடந்துவர விரும்பினாலும் அப்படி வரமுடியாது. அங்கிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும், ஒருவராலும் முடியாது’ என்றான்.

27“அதற்கு அவன், ‘அப்படியானால் தகப்பனே, நான் உம்மிடம் கெஞ்சிக்கேட்கிறேன். லாசருவை என்னுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும். 28ஏனெனில், எனக்கு ஐந்து சகோதரர் இருக்கிறார்கள். அவன் போய், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும். இந்த வேதனை நிறைந்த இடத்திற்கு, அவர்களும் வராமல் இருக்கட்டும்’ என்றான்.

29“அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும், இறைவாக்கினர்களும் எழுதிக் கொடுத்தவை அவர்களிடம் உண்டு; அவர்கள் அவற்றிற்கு செவிகொடுக்கட்டும்’ என்றான்.

30“அதற்கு அவன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களிலிருந்து ஒருவன் அவர்களிடம் போனால், அவர்கள் மனந்திரும்புவார்கள்’ என்றான்.

31“அப்பொழுது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேக்கும், இறைவாக்கினர்களுக்கும் அவர்கள் செவிகொடாவிட்டால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும், அவர்கள் நம்பமாட்டார்கள்’ என்று சொன்னான்.”