அத்தியாயம் 6

மீதியானியர்கள் இஸ்ரவேலரிடம் போரிடுதல்

1பின்னும் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அப்பொழுது யெகோவா அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். 2மீதியானியர்களின் கை இஸ்ரவேலின்மேல் பெலமாக இருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினால் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் பாதுகாப்பான இடங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள். 3இஸ்ரவேலர்கள் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்குப்பகுதி மக்களும் அவர்களுக்கு எதிராக எழுந்து வந்து; 4அவர்களுக்கு எதிரே முகாமிட்டு, காசாவின் எல்லைவரை நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையும், ஆடுமாடுகள் கழுதைகளையும்கூட வைக்காமல் போவார்கள். 5அவர்கள் தங்களுடைய மிருகஜீவன்களோடும், தங்களுடைய கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல திரளாக வருவார்கள்; அவர்களும் அவர்களுடைய ஒட்டகங்களும் எண்ணமுடியாததாக இருக்கும்; இப்படியாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள். 6இப்படியாக மீதியானியர்களாலே இஸ்ரவேலர்கள் மிகவும் பெலவீனப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள். 7இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினாலே யெகோவாவை நோக்கி முறையிட்டபோது, 8யெகோவா ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமையாக இருந்த வீட்டிலிருந்து புறப்படவும் செய்து, 9எகிப்தியர்கள் கைகளிலிருந்தும், உங்களை ஒடுக்கின எல்லோருடைய கைகளிலிருந்தும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து, 10நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியர்களுடைய தெய்வங்களுக்குப் பயப்படாமல் இருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.