கிதியோனை யெகோவாவுடைய தூதன் சந்தித்தல்

11அதற்குப்பின்பு யெகோவாவுடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன் கோதுமையை மீதியானியர்களின் கைக்குத் தப்புவிக்க, ஆலைக்கு அருகில் அதைப் போரடித்தான். 12யெகோவாவுடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே யெகோவா உன்னோடு இருக்கிறார் என்றார். 13அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவரே, யெகோவா எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் எங்களுக்கு ஏன் சம்பவித்தது? யெகோவா எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது யெகோவா எங்களைக் கைவிட்டு, மீதியானியர்களின் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். 14அப்பொழுது யெகோவா அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். 15அதற்கு அவன்: ஆ என்னுடைய ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே காப்பாற்றுவேன்; இதோ, மனாசேயில் என்னுடைய குடும்பம் மிகவும் எளியது; என்னுடைய தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன் என்றான். 16அதற்குக் யெகோவா: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார். 17அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும். 18நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார். 19உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை வெளியே கர்வாலி மரத்தின் கீழே இருக்கிற அவரிடம் கொண்டுவந்து வைத்தான். 20அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து குழம்பை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். 21அப்பொழுது யெகோவாவுடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எரித்துப்போட்டது; யெகோவாவின் தூதனோ. அவனுடைய கண்களுக்கு மறைந்துபோனார். 22அப்பொழுது கிதியோன், அவர் யெகோவாவுடைய தூதன் என்று அறிந்து: ஐயோ, யெகோவாவாகிய ஆண்டவரே, நான் யெகோவாவுடைய தூதனை முகமுகமாக பார்த்தேனே என்றான். 23அதற்குக் யெகோவா: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். 24அங்கே கிதியோன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது. 25அன்று இரவிலே யெகோவா அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகிலுள்ள தோப்பை வெட்டிப்போட்டு.