கிதியோனின் மரணம்

28இப்படியாக மீதியானியர்கள் திரும்ப தலை தூக்காதபடி, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் 40 வருடங்கள் அமைதியாக இருந்தது. 29யோவாசின் மகனான யெருபாகால் (கிதியோனின் மற்றொரு பெயர்) போய், தன்னுடைய வீட்டிலே வாழ்ந்து வந்தான். 30கிதியோனுக்கு அநேகம் மனைவிகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான மகன்கள் எழுபதுபேர். 31சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பெயரிட்டான். 32பின்பு யோவாசின் மகனான கிதியோன் நல்ல முதிர்வயதிலே இறந்து, ஒப்ராவிலே தன்னுடைய தகப்பனான யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். 33கிதியோன் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பவும் பாகால்களைத் தொழுதுகொண்டதால் விபசாரம் செய்தவர்களாகி, பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள். 34இஸ்ரவேல் மக்கள் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லா எதிரிகளின் கைகளிலிருந்தும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய யெகோவாவை நினைக்காமலும், 35கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத்தகுந்த தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.