அத்தியாயம் 9
அபிமலேக்கு ராஜாவாகுதல்
1யெருபாகாலின் மகன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன்னுடைய தாயினுடைய சகோதரர்களிடம் போய், அவர்களையும் தன்னுடைய தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி: 2யெருபாகாலின் மகன்கள் 70 பேரான எல்லோரும் உங்களை ஆள்வது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மட்டும் உங்களை ஆள்வது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் சரீரமுமானவன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்றான். 3அப்படியே அவன் தாயின் சகோதரர்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றும்படியாக மாறியது. 4அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து 800 கிராம்ஸ் வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனிதர்களை வேலைக்கு வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். 5அவன் ஒப்ராவிலிருக்கிற தன்னுடைய தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் மகன்களான தன்னுடைய சகோதரர்கள் 70 பேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய மகனான யோதாம் ஒளிந்திருந்தபடியால் அவன் தப்பினான். 6பின்பு சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களும், மில்லோவின் குடும்பத்தார்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தின் அருகில் அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.


