அபிமெலேக்கு சீகேமை எதிர்த்துப் போரிடுதல்
22அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருடங்கள் அரசாண்டபின்பு, 23அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனிதர்களுக்கும் நடுவே தீங்கை உண்டாக்கும் ஆவியை தேவன் வரச்செய்தார். 24யெருபாகாலின் 70 மகன்களுக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்தது, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனான அபிமெலேக்கின்மேலும், தன்னுடைய சகோதரர்களைக் கொல்ல அவனுடைய கைகளை பெலப்படுத்தின சீகேம் மனிதர்கள் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனிதர்கள் அபிமெலேக்குக்கு துரோகம் செய்தார்கள். 25சீகேமின் மனிதர்கள் மலைகளின் உச்சியில் அவனுக்கு ஒளிந்திருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழிநடந்துபோகிற எல்லோரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது. 26ஏபேதின் மகனான காகால் தன்னுடைய சகோதரர்களோடு சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனிதர்கள் அவனை நம்பி, 27வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சை தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையில் ஆட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், சாப்பிட்டுக்குடித்து, அபிமெலேக்கை சபித்தார்கள். 28அப்பொழுது ஏபேதின் மகனான காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனுக்கு பணியாற்றவேண்டியது என்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியதரிசி அல்லவா? சீகேமின் தகப்பனான ஏமோரின் மனிதர்களையே பணிந்துகொள்ளுங்கள்; அவனை நாங்கள் பணிந்துகொள்வானேன்? 29இந்த மக்கள்மட்டும் என்னுடைய கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் படையைப் பெருகச்செய்துப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான். 30பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் மகனான காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமடைந்து, 31இரகசியமாக அபிமெலேக்கினிடத்திற்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் மகனான காகாலும் அவனுடைய சகோதரர்களும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு எதிராக எழுப்புகிறார்கள். 32ஆகையால் நீர் உம்மோடிருக்கும் மக்களோடு இரவில் எழுந்து வந்து வெளியிலே ஒளிந்திருந்து, 33காலையில் சூரியன் உதிக்கும்போது எழுந்து, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற மக்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, நீர் செய்ய நினைத்ததை அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான். 34அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த எல்லா மக்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு எதிராக நான்கு படைகளாக ஒளிந்திருந்தார்கள். 35ஏபேதின் மகன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் நுழைவுவாயிலில் நின்றான்; அப்பொழுது ஒளிந்திருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற மக்களோடு எழும்பி வந்தான். 36காகால் அந்த மக்களைப் பார்த்து: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள் என்று சேபூலோடு சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைப் பார்த்து, மனிதர்கள் என்று நினைக்கிறாய் என்றான். 37காகாலோ திரும்பவும்: இதோ, மக்கள் தேசத்தின் மத்தியிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாக வருகிறார்கள் என்றான். 38அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் பணிந்துகொள்வதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன்னுடைய வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த மக்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடு யுத்தம்செய் என்றான். 39அப்பொழுது காகால் சீகேமின் மனிதர்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடு யுத்தம்செய்தான். 40அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்வரை அநேகர் வெட்டப்பட்டு விழுந்தார்கள். 41அபிமெலேக்கு அருமாவில் இருந்து விட்டான்; சேபூல் காகாலையும் அவனுடைய சகோதரர்களையும் சீகேமிலே குடியிருக்கவிடாதபடி துரத்திவிட்டான். 42மறுநாளிலே மக்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது, 43அவன் மக்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படைகளாக பிரித்து, வெளியிலே ஒளிந்திருந்து, அந்த மக்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிறதைப் பார்த்து, அவர்களைத் தாக்கிக் கொன்றான். 44அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் நுழைவுவாயிலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற அனைவரையும் தாக்கி, அவர்களைக் கொன்றார்கள். 45அபிமெலேக்கு அந்த நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்செய்து, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த மக்களைக்கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான். 46அதைச் சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தெய்வத்தினுடைய கோவில் கோட்டைக்குள் நுழைந்தார்கள். 47சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது, 48அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா மக்களோடும் சல்மோன் மலையில் ஏறி, தன்னுடைய கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கிளையை வெட்டி, அதை எடுத்து, தன்னுடைய தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த மக்களைப் பார்த்து: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் விரைவாக என்னைப்போலச் செய்யுங்கள் என்றான். 49அப்படியே எல்லா மக்களும் அவரவர் ஒவ்வொரு கிளைகளை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்தக் கோட்டைக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த கோட்டையை எரித்துப்போட்டார்கள்; அதினால் ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய 1,000 சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் இறந்தார்கள்.


