யெப்தா தலைவனாக தேர்ந்தெடுக்கப்படுதல்
17அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள். 18அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.
அத்தியாயம் 11
1கீலேயாத்தியனான யெப்தா வல்லமையுள்ள வீரனாக இருந்தான்; அவன் வேசியின் மகன்; கிலெயாத் அவனைப் பெற்றான். 2கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் மகன்களைப் பெற்றாள்; அவனுடைய மனைவி பெற்ற மகன்கள் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்களுடைய தகப்பன் வீட்டிலே சொத்து இல்லை; நீ அந்நிய பெண்ணின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள். 3அப்பொழுது யெப்தா: தன்னுடைய சகோதரர்களை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனிதர்கள் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போவார்கள். 4சிலநாட்களுக்குப்பின்பு, அம்மோனிய மக்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள். 5அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்யும்போது கீலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், 6யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய எங்களுடைய தளபதியாக இருக்கவேண்டும் என்றார்கள். 7அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என்னுடைய தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து சம்பவித்திருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான். 8அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களோடு வந்து, அம்மோன் மக்களோடு யுத்தம்செய்து, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாக இருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடம் வந்தோம் என்றார்கள். 9அதற்கு யெப்தா: அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, யெகோவா அவர்களை எனக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாக வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான். 10கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன்னுடைய வார்த்தையின்படியே செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவாக நின்று கேட்பாராக என்றார்கள்.


