அம்மோனிய ஜனங்களின் அரசனுக்கு யெப்தாவின் செய்தி
11அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு போனான்; மக்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் தளபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன்னுடைய காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே யெகோவாவுடைய சந்நிதியிலே சொன்னான். 12பின்பு யெப்தா அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நீ என்னுடைய தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்செய்ய வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான். 13அம்மோன் மக்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களை நோக்கி: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவங்கி யாப்போக், யோர்தான்வரை இருக்கிற என்னுடைய தேசத்தைக் பிடித்துக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாகத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். 14யெப்தா மறுபடியும் அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது: 15யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் தேசத்தையாகிலும், அம்மோன் மக்களின் தேசத்தையாகிலும் பிடித்துக்கொண்டதில்லையே. 16இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரம்வரை நடந்து, பின்பு காதேசுக்கு வந்து, 17இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோகிறோம் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர்கள் காதேசிலே தங்கியிருந்து, 18பின்பு வனாந்திரவழியாக நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் நுழையாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே முகாமிட்டார்கள். 19அப்பொழுது இஸ்ரவேலர்கள் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியர்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாக எங்களுடைய இடத்திற்கு கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள். 20சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன்னுடைய மக்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே முகாமிட்டு, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான். 21அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சீகோனையும் அவனுடைய எல்லா மக்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்கள் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியர்களின் நாடுகளையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி, 22யாப்போக்வரை, வனாந்திரம் துவக்கி யோர்தான்வரை இருக்கிற எமோரியரின் எல்லைகளையெல்லாம் சொந்தமாக பிடித்துக்கொண்டார்கள். 23இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா? 24உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் பிடித்துக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் பிடித்துக்கொள்கிறோம். 25மேலும் சிப்போரின் மகனான பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைவிட உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலர்களோடு எப்போதாவது வாதாடினானா? எப்போதாவது அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்தானா? 26இஸ்ரவேலர்கள் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியின் அருகே எல்லா ஊர்களிலும், முந்நூறு வருடங்கள் குடியிருக்கும்போது, இவ்வளவு காலமாக நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாமல் போனதென்ன? 27நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய யெகோவா இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான். 28ஆனாலும் அம்மோன் மக்களின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளை கேட்காமற்போனான்.


