குதிரைகளைப்பற்றிய தரிசனம்

7தரியு அரசாண்ட இரண்டாம் வருடம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்திநான்காம் தேதியிலே, யெகோவாவுடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் மகன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டானது; அவன் சொன்னது: 8இதோ, இன்று இரவிலே சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு மனிதனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் இருந்தன. 9அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னுடன் பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார். 10அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்த மனிதன் மறுமொழியாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் யெகோவா அனுப்பினவர்கள் என்றார். 11பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற யெகோவாவுடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலாக இருக்கிறது என்றார்கள். 12அப்பொழுது யெகோவாவுடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் யெகோவாவே, இந்த எழுபது வருடங்களாக நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எதுவரை இரங்காதிருப்பீர் என்று சொல்ல, 13அப்பொழுது யெகோவா, என்னுடன் பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் மறுமொழியாகச் சொன்னார். 14அப்பொழுது என்னுடன் பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் யெகோவா உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன். 15நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் தீங்கை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாக வாழுகிற அன்னியமக்கள்மேல் நான் கடுங்கோபம்கொண்டேன். 16ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று யெகோவா சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று கூறு என்றார். 17இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் நிரம்பியிருக்கும்; இன்னும் யெகோவா சீயோனைத் தேற்றரவு செய்வார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று மேலும் கூறு என்றார்.