Select a Verse

பில்தாத் பேசுதல்

1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது:

2“நீ எப்பொழுது இந்தப் பேச்சுக்களை நிறுத்துவாய்?

நிதானமாயிரு, அப்பொழுது நாங்கள் பேசுவோம்.

3உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு

மதியீனர்களாய் எண்ணப்படுவது ஏன்?

4உன் கோபத்தில் உன்னையே காயப்படுத்துகிறவனே,

உனக்காக பூமி கைவிடப்படுமோ?

பாறை தன் இடத்தைவிட்டு நகருமோ?

5“கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது;

அவனுடைய நெருப்புச் சுவாலையும் எரியாமல் போகிறது.

6அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது;

அவனுடைய விளக்கும் அணைந்து போகிறது.

7அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது;

அவனுடைய சுயதிட்டங்கள் அவனைக் கீழே வீழ்த்துகின்றன.

8அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு,

அந்த வலையின் சிக்கலிலே நடக்கிறான்.

9பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது;

கண்ணி அவனை இறுக்கிப் பிடிக்கிறது.

10சுருக்கு அவனுக்காகத் தரையிலும்,

பொறி அவன் பாதையிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

11எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி,

அவன் கால்களை அலையவைக்கும்.

12பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது;

பெருங்கேடு அவன் விழும்போது ஆயத்தமாக இருக்கிறது.

13வியாதி அவன் தோலைத் தின்கிறது;

சாவின் முதற்பேறு அவன் அங்கங்களை விழுங்குகிறது.

14அவன் தன் கூடாரத்தின் பாதுகாப்பிலிருந்து பிடுங்கப்பட்டு,

பயங்கரங்களின் அரசனிடம் கொண்டுபோகப்படுகிறான்.

15அவனுடைய கூடாரத்தில் நெருப்பு குடியிருக்கும்;

அவனுடைய உறைவிடங்களில் கந்தகம் வாரி இறைக்கப்படும்.

16கீழே அவனுடைய வேர்கள் காய்ந்து போகின்றன;

மேலே அவனுடைய கிளைகள் வாடிப்போகின்றன.

17அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது;

மண்ணில் அவனுக்குப் பெயர் இல்லாதிருக்கிறது.

18அவன் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் தள்ளப்படுகிறான்;

உலகத்திலிருந்தும் துரத்தப்படுகிறான்.

19அவனுடைய மக்கள் மத்தியில் அவனுக்கு சந்ததிகளே இல்லை,

அவன் வாழ்ந்த இடத்தில் மீதியாயிருப்பவன் ஒருவனும் இல்லை.

20அவன் முடிவைக்கண்டு மேற்கிலுள்ளோர் நடுங்கினர்;

அவன் காலத்திற்கு பின்பு வாழ்ந்த கிழக்கிலுள்ளோர் திகிலுற்றனர்.

21தீயவனின் குடியிருப்பு இத்தகையதே;

இறைவனை அறியாதவனின் இருப்பிடமும் இத்தகையதே.”